லிபியத் துறைமுகத்தில் ரஷ்யப் போர்க்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்? வெடிப்பில் கப்பல் மூழ்கியது; இரண்டாவது கப்பலும் இலக்கு


கிழக்கு
லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்யக் கடற்படைக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் அல்லது கடல் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கிழக்கு லிபிய நிர்வாகத்தின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ரஷ்யக் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து தீ பரவியுள்ளது. மருத்துவ வட்டாரங்களின் தகவலின்படி, சிலர் காயமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

வான்டோர் (Vantor) செயற்கைக்கோள் படங்களின்படி, தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ரஷ்யக் கடற்படையின் மெர்குரி (Mercury) என்ற போர்க்கப்பலாக இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், கப்பலின் பெரும்பகுதி கடலில் மூழ்கியிருப்பதும், முன்பகுதி மாத்திரம் நீருக்கு மேலே தெரிவதும் கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும் கிழக்கு லிபிய நிர்வாகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்பவும் பொருட்களை ஏற்றிக்கொள்ளவும் அந்தக் கப்பல் பெங்காசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக லிபிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தைக் கண்டித்துள்ள கிழக்கு லிபிய அதிகாரிகள், இதனை நாட்டின் இறையாண்மை மீறலாகவும் கடல்சார் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யாவுடன் இணைந்து கூட்டுவிசாரணை நடத்தப்படும் என்றும் பொறுப்பானவர்கள் மீது சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பெங்காசி கடற்கரைக்கு அப்பால் மற்றொரு வர்த்தகக் கப்பலும் ஆளில்லா விமானப் படகால் தாக்கப்பட்டதாக இரண்டு லிபிய இராணுவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன. அந்தக் கப்பலின் பணியாளர்களை லிபியக் கடற்படையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்காசி கடற்கரைக்கு அப்பால் 12க்கும் மேற்பட்ட கடற்படை ட்ரோன்கள் அல்லது ஆளில்லா படகுகளை லிபியக் கடற்படை மற்றும் விமானப்படைகள் இடைமறித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவங்கள் உக்ரைன் – ரஷ்யப் போரின் தாக்கம் மத்தியதரைக் கடல் பிராந்தியத்திற்கும் விரிவடைகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

No comments